thamizmanam

April 14, 2008

star author

கிவியன்


மெளனம்

உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு என் வணக்கம்!
மறுபடியும் இன்னுமொரு சுரேஷ் பெயர்தான் மிகவும் பரவலாக காணப்படுவதென்றால் என் இனிஷியலும் என்! நான் பிறந்தபோது 5-பைசா கார்டில் ஆண் குழந்தை பிறந்தால் "சுரேஷ்" எனவும் பெண்ணாக பிறந்தால் "சரோஜா" என பெயர் வைக்கவும் என என் சித்தி (அம்மாவின் சகோதரி) கடிதம் போட்டிருந்தார்கள். அப்போதிருந்த பாண்டிச்சேரி வழக்கப்படி குழந்தை பிறந்ததும் மறுநாளே பெயர் கேட்டு பதிவு செய்யும் வழக்கத்தால் வந்த வினை. இல்லையென்றால் 10 நாள் கழித்து தொட்டிலில் போட்டு கந்தசாமியோ ராமசாமியோ இல்லை வைத்தியநாதசாமியோவாகியிருப்பேன்.
பிறந்தது பாரதிதாசன் பிறந்த புதுவையில் என்றாலும் வளர்ந்தது கூடவே படித்தது எல்லாம் நம் மதுரையில். மதுரை கல்லூரியில் முதுகலை இயற்பியல்; பின்பு உயர் அழுத்த இயற்பியலில் முனைவர் பட்டம் மும்பையில் பாபா அனு ஆராய்ச்சி மையத்தில் வனவாசம் போல் பதினான்கு ஆண்டுகள் வாழ்ந்தபின் 2002ல் நியுஸிலாந்துக்கு குடிபெயர்ந்தேன். தற்சமயம் எடின்பரோவில் ஆராய்ச்சிப் பணி தொடர்கிறது
நான் படித்தது ஆங்கில மீடியத்தில். தமிழில் ஒரு ஆர்வமும் கிடையாது. அம்புலிமாமா, முத்து காமிக்ஸ், கோகுலம் ரத்னபாலாவை தாண்டி விகடன் குமதம் பக்கம் வரும்போது ஒன்பதாம் வகுப்பு. அனால் அதே சமயம் என் அப்பா ரீடர்ஸ் டைஜெஸ்ட்; சோவியத் யூனியன் (பெரிசாக சொளகு சைசில் வரும்) (அதற்காக அவர் கம்யுனிஸ்ட் இல்லை, ஏன் வாங்கினார் என்று புரியவில்லை) வாங்குவார் அதை படிக்கும் ஆர்வமிருந்தது. இது தவிர நண்பர்கள் முலம் கிடைக்கும் ராஜே(ஷ்)( ந்திர) குமார்கள், பாக்கெட் நாவல்கள்/ Jame Hadley Chase வகையறா ஆங்கில நாவல்கள் படிப்பது அத்தோடு சரி.
என் அண்ணனுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு. பல கவிதைகள் எழுதியிருக்கிறான் மதுவந்தி என்ற புனைப்பெயரில். நண்பர்களோடு மொட்டைமாடியில் நண்பர்களுடன் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பான். அவன் படிக்க எடுத்து வரும் புத்தகங்கள் மிக ஒல்லியாக ஒரு படம் கூட இல்லாமல் பரிதாபமாக இருக்கும். சிறு பத்திரிக்கைகள் என்றுமே இப்படித்தான் இருக்கிறது. அதில் என்னை கவர்ந்தது கணையாழி மற்றும் காலச்சுவடு (நெசமாதான் நம்புங்கப்பா). அப்போது மோக முள் மறுபடியும் தொடராக வந்து கொண்டிருந்தது. ஒரு கரண்டி படத்துக்கு பக்கத்தில் அத்தியாய எண் போட்டு, அப்போது ஜானகிராமன் யார் என்றெல்லாம் தெரியாது ஆனால் படிப்பதற்கு மிக வசீகரமாக இருந்தது. மற்றது சுஜாதா எழுதிய கடைசி பக்கம். இதுவே தமிழில் சிறந்த படைப்புகளை தேடும் தூண்டில்களாக கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மீது ஆர்வம் வர காரணம் என கூறலாம். இது தவிர விபரீதமாய் என அண்ணன் தன் நண்பர் பரிவாரங்களுடன் "பூபாளம்" என்று ஒரு கையெழுத்து பத்திரிகையை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு துணை-நிர்வாக ஆசிரியர் லெவலுக்கு என்னை வேலையில் அமர்த்தினான் (வீட்டுல சேட்டை பண்ணிக்கிட்டு சும்மா இருந்ததால் வந்த விணை). இவிங்க பத்திரிக்கைக்கு வர படைப்புகள், வாசகர் கடிதங்கள்(?) எல்லாத்தையும் சேகரிச்சு ஒரு ஃபைல்ல போடுரது, முகவரி எழுதி வாசகர்களுக்கு பிரதியை அஞ்சம் மூலம் அனுப்பவது என்ற மிக பொறுபுள்ள பதவி. முதல்ல கையில எழுதி ஸ்டென்சில் காப்பி எடுத்து வந்தது. பின்பு வாசகர் வட்டம் பெரிதாகி சுமாரி 500 அச்சுப்பிரதி போடுமளவுக்கு உயர்ந்து . இதில் வெளியான ஆகாத எல்லா படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். அதையெல்லாம் படித்து நாமெல்லாம் இந்த ரேஞ்சுக்கு எழுத முடியாது (நம்ம ரேஞ்சே வேர!!) என்று எப்போதுமே எழுத துணிந்த்தில்லை.

நியுஸிலாதுக்கு குடிபெயர்ந்த பின், கணணியும் கொடுத்து கூடவே அகலப்பட்டை இணைப்பும் கொடுத்து அதற்கு மேலாக அதில் மேய்வதற்கு சம்பளமும் கொடுத்தது வலையில் தமிழை தேடி தமிழ் கண்டபின் புளங்காகிதமடைந்து மேலும் தேடி ஃபாளாகரை கண்டு பின்பு தமிழ்மணத்தில் இணைந்து இப்பொது நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. நான் பதிவெழுதுவது ஒரு விதத்தில் டையரி குறிப்பெழுதுவது போல் ஆரம்பித்தேன், ஒரே வித்தியாசம் டையரியை என்னைத் தவிர யாரும் படிக்க இயலாது, ஆனால் வலை பிறரும் படிக்கக்கூடியது , ஈடு இணையற்ற வசீகரம்.
ஆடிக்கொருநாள் அம்மாவாசைக்கு ஒரு நாள் என தேமேன்னு பதிவு போட்டுக்கிட்டுருந்தவன மேடைல ஏத்தி நட்சத்திரமாக்கிர்ரதுன்னு யாருக்கோ தோணிப்போச்சு (நல்லா இருகங்கப்பா). ஏழு நாட்களும் நான் எழுது(ம்)வதை படித்து பொருத்தருள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கிவியன்.