March 8, 2010-அன்று தொடங்கும் வாரத்தின் நட்சத்திரம்
Dr N Shalini
தமிழில்
என்னை பற்றி ஸ்பெஷலாய் சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. நான் பிறந்த போது அதிசயங்கள் எதுவும் நிகழவில்லை. எத்தனையோ குழந்தைகள் அதே தேதியில், ஏன் அதே நேரத்தில் கூட பிறந்திருக்கலாம், ஆனால் நான் இப்போது உள்ளபடி ஆவதற்கு முதல் காரணம் என் அப்பா. எங்கே போனாலும் நிறைய புத்தங்களை வாங்கிக்கொண்டு வருவார், அதனால் சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரே புத்தமோகம் தான். அம்மா சொல்லுவார்கள், மற்ற பிள்ளைகளை படி படி என்று மிரட்ட வேண்டி இருக்குமாம், என்னை மட்டும் படித்தது போதும் வந்து சாப்பிடேன் என்று மிரட்டினால் தான் புத்தகத்தையே மூடுவேனாம்.
எங்கள் வீட்டில் எல்லோருமே அறிவியல் ரீதியாகவே யோசிப்பார்கள். உணவு மேசையில் உட்கார்ந்து அறிவியல் பேசிக்கொள்ளும் விசித்திரமான குடும்பம் நாங்கள். அப்பா சொல்வார், வெறும் விந்தணுவிலிருந்து உயிர் வர்றாது, அதே போல வெறும் கருமுட்டையிலிருந்தும் உயிர் வர்றாது. இரண்டும் எந்த மதிப்புமே இல்லாத பூஜியங்கள் தான், ஆனால் இந்த இரண்டு பூஜியங்களும் இணைந்து தான் எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. ஆக ஆரம்பம் என்பது எப்போதுமே பூஜியம் தான், அதற்கு பிறகு கிடைப்பது எல்லாமே ப்ளஸ் தான், என்பார். இந்த அளவுக்கு அறிவியலையும் மெஞ்ஞானத்தையும் கலந்து பேசும் தன்மை கொண்ட அந்த அப்பாவுடன் சின்ன வயதிலிருந்தே நிறைய சையின்ஸ் பேசி பேசி, அறிவியல் ரீதியாக யோசிப்பதென்பதே என் இயல்பாகி விட்டிருந்தது.
அதனால் என் அம்மாவுக்கு என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. ஆனால் எனக்கு மெடிகல் காலேஜை பற்றியும், அங்கே போனால் படிக்க வேண்டிய குண்டு குண்டு புத்தங்களை பற்றியும் ஏற்கனவே தெரியும் என்பதால், அவ்வளவு எல்லாம் மெனக்கெட எனக்கு இஷ்டமே இல்லை. அதுமட்டுமல்ல, பதின் பருவத்தின் உச்சத்தில் எனக்கு புதிதாய் பல சிதறல்கள். நான் படித்ததென்னவோ ஹிந்தியை இரண்டாம் மொழியாய் கொண்ட CBSE பள்ளிக்கூடத்தில், மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள எல்லோரையும் போல நானும் ஒன்பதாம் வகுப்பில் தமிழ் இரண்டாம் மொழிக்கு மாறினேன்.
அப்போதெல்லாம் எனக்கு தமிழ் எழுத படிப்பதென்றால் ரொம்ப கஷ்டம், எந்த இடத்தில் எந்த ர, எந்த ல, எந்த ந வரும் என்று தெரியாமல் ரொம்ப திண்டாடுவேன். இந்த லட்சணத்தில் தமிழில் கட்டுரை எல்லாம் வேற எழுத வேண்டும். எங்கள் பள்ளியிலோ ஒவ்வொரு எழுத்து பிழைக்கும் கால் மதிப்பெண் கட் என்கிற விதி இருந்தது. இந்த கெடுபிடியில் நான் தப்பும் தவறுமாய் எழுதிய தமிழ் கட்டுரைக்கு முழு மதிப்பெண் கொடுத்திருந்தார், எங்கள் தமிழ் ஆசிரியை கல்யாணி வரதராஜன். எனக்கு பெரிய அதிர்ச்சி, அதை விட பெரிய அதிர்ச்சி, ஆசிரியை என்னை கூப்பிட்டு, ”அழகா எழுதுற, கவிதை போட்டிக்கு எழுது” என்று சொன்னது. எழுத்து பிழைகளை மீறி, எதிர்பாராமல் கிடைத்த இந்த ஊக்குவிப்பால், நான் தொபக்கடீரென்று தமிழ் மீது காதல் கொண்டேன்…..அப்பா பத்திரமாக சேர்ந்து வைத்திருந்த எட்டு தொகை பத்து பாட்டு, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் என்று எல்லாவற்றையும் சுட்டு சுட்டு படிக்க ஆரம்பித்ததில், தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால் எனக்கு உயிரியல் பாடத்திலும் எக்கசெக்க ஆர்வம் இருந்ததால், அதையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து படித்து கிழித்ததில் அதிலும் ஓவராய் மதிப்பெண் வாங்கிவிட, என் அம்மாவுக்கோ என்னை டாக்டராக்கியே தீரவேண்டும் என்கிற கனவு.
கடைசியில் அம்மா என்னோடு ஒரு டீல் பேசினார்கள், ”நீ எனக்காக உன் வாழ் நாளின் ஐந்து வருடங்களை செலவழித்து MBBS படித்தாய் என்றால், அதன் பிறகு நான் உன்னை எதுவுமே கேட்க மாட்டேன், டாக்டருக்கு படித்துவிட்டு நீ வேறு என்ன வேண்டுமானாலும் படி, செய்”, என்றார்கள். பெற்ற தாய்க்காக என் வாழ்நாளின் 5 ஆண்டுகளை தியாகம் செய்து தான் தொலைப்போமே என்று சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தேன். அந்த கல்லூரியின் வரலாற்றிலேயே கரஸ்பாண்டென்ஸில் MBBS படித்த ஒரே மாணவி நானாகத்தான் இருப்பேன்….அவ்வளவு சொர்ப்ப அட்டெண்டென்ஸ் தான் எனக்கு. தினமும் அட்டெண்டென்ஸ் போட்டுவிட்டு, ஜன்னல் வழியே எகிறி குதித்து மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவேன்……வழக்கமாக ஆண்கள் தான் இந்த வானர வேலைகளை செய்வார்கள் என்பதால் ஆசிரியர்கள் எல்லோருமே ஆண் மாணவர்களை தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். நான் ஜன்னல் வழியே குதித்த கண்கொள்ளா காட்சியை காணத்தவறிவிடுவார்கள்! நான் பாட்டிற்கு வீட்டுக்கு ஓடி போய் கதை புத்தகங்களை படித்தும், எழுதியும் கொண்டிருப்பேன். சில சிறுகதைகளும், கவிதைகளும், நாவல்களும் பிரசுரமாகி என்னை எழுத்து மோகத்தில் ஆழ்தியும் விட்டன.
இப்படி எல்லாம் நான் ரொம்ப ஸ்ரத்தையாய் கட் அடித்துக்கொண்டிருந்த போது எங்களுக்கு முதலாம் ஆண்டின் அறிமுக பாடமாய் சைக்கியாட்டிரி பற்றி கிளாஸ் எடுக்க வந்தார் அப்போது எங்களுக்கு உதவி பேராசிரியராய் இருந்த மனநலமருத்துவர் திருநாவுக்கரசு அவர்கள். மிக ஸ்வாரசியமாக, தெளிவாக அவர் நடத்திய வகுப்பை ஒரே ஒரு நாள் தப்பித்தவறி கவனித்ததன் விளைவு, சைக்கியாட்ரிஸ்டாகியே தீரவேண்டும் என்று அன்றே முடிவு செய்துவிட்டேன். MBBS படித்து முடித்தால் தான் சைக்கியாட்டரி பக்கமே போக முடியும் என்கிற ஒரே காரணத்திற்காக, 5 வருடம் மாங்கு மாங்கு என்று மருத்துவம் படித்து முடித்து, மறு ஆண்டே மனநலமருத்துவம் படிக்க சேர்ந்துவிட்டேன்.
நான் மனநல மருத்துவம் தான் படிப்பேன் என்று அடம் பிடித்த போது, “பார்த்து, உங்க பொண்ணு மெண்டலாயிட போகுது” என்று பலர் என் அம்மாவை பயமுறுத்தினார்கள், ஆனால் என் அம்மா நாங்கள் ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணின டீலை மதித்து ஆட்சேபிக்காமல் இருந்தார்கள், நான் மதுரை மருத்துவ கல்லூரியில் சைக்கியாட்டரி படிக்க சேர்ந்தேன். பாண்ட் சட்டை போட்ட மெட்ராஸ்கார பெண் என்பதாலேயே சில பல சிக்கல்களை நான் சந்திக்க நேர்ந்தாலும், என் பேராசிரியர் திரு கோவர்தனன் அவர்கள் எப்போதுமே எனக்கு பக்க பலமாய் இருந்தார், என்னை ஊக்குவித்து என் அறுவியல் பார்வையை மேலும் கூராக்கினார். எனக்கு கூடுதல் பொறுப்புக்களை கொடுத்து என் திறமைகளை வளர்த்தார். நான் படித்து முடித்து சைக்கியாட்ரிஸ்ட் ஆனேன். உடனே மேற்கொண்டு படிக்க வேண்டும், வெளி நாட்டிற்கெல்லாம் போய் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மற்ற மாணவர்களை போல நானும் யோசிக்க ஆரம்பித்த போது, “இந்தியாவிலேயே இருந்து நோயாளிகளை பார், ஒரு மருத்துவருக்கு புத்தகமே நோயாளிகள் தான்” என்று எனக்கு அறிவுறுத்தினார் மனநல மருத்துவர் முத்தழகன் அவர்கள். அவர் அறிவுரையின் படி நான் படித்து முடித்த அடுத்த மாதமே மைண்ட் ஃபோகஸ் என்கிற மனநல கிளினிக்கை ஆரம்பித்து பிராக்டிஸ் செய்தபடியே பி எச் டி ஆராய்சியையும் துவக்கினேன். இந்த ஆராய்ச்சி என்னை எத்தனையோ வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று, பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து எத்தனையோ பிரயோஜனமான விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்களை உருவாக்கியது. இதனால் என் பார்வை வட்டம் விரிந்துக்கொண்டே போனது.
ஒரு சராசரி இந்திய பெண்ணை போல நான், என் வீடு, என் குடும்பம், குட்டி என்று சின்ன குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல், உலகத்திற்கு உபயோகமாய் ஏதாவது செய்யும் ஆர்வம் அதிகரிக்க, மனநலசேவை மற்றும் ஆராய்சி அரக்கட்டளை என்கிற ஒன்றை உருவாக்கி பல கிராமங்களுக்கு போய் பொதுமக்களிடம் பணியாற்றிய போது தான் கவனித்தேன்…. இந்த கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடிமக்களிடம் எவ்வளவு அறிவியல் அறியாமை இருந்ததென்று. தன் உடம்பு எப்படி இயங்குகிறது என்று கூட தெரியாமல் ஆண்கள் படும் அவஸ்தையை பார்த்து ஆட்சரியபட்டேன். அப்போது ஒரு பத்திரிக்கையில் பாலியல் பற்றிய ஒரு தொடரை எழுத எனக்கு அழைப்பு வர, ஆரம்பத்தில் நான் தயங்கினேன்…..அப்புறம் என் பாட்டியின் எதற்கும் அஞ்சாதகுணம் எனக்குள்ளும் தலைதூக்க, அறிவியல்ல ஆண் என்ன பெண் என்ன, என்று களமிறங்கினேன். அதுவரை, கொச்சையாகவும் இழிவாகவும் மட்டுமே எழுதப்பட்டுவந்த காமத்தை பற்றி நான் கம்பீரமான அறிவியல் நடையில் எழுதியது பலரது கவனத்தை திருப்ப, மேலும் பல தொடர்களையும், புத்தங்களையும் எழுதும் வாய்ப்புக்கள் ஏற்பட்டன.
எனக்கு இயல்பிலேயே வந்த மொழிதிறன், அறிவியல் சிந்தனை, இரண்டையும் குழைத்து வெளிபடுத்துவது எனக்கும் ரொம்ப எளிதாக இருந்ததால், நிறைய எழுதவும் பேசவும் செய்தேன்….அதனால் தமிழ் கூறும் நல்லுலகில் என் பெயர் தலைதூக்க ஆரம்பித்தது. நான் எல்லோருக்கும் பரிச்சையமான நபரானேன்…. என் அம்மா உடனே சொல்லுவார்கள், ”பார் நான் சொன்னபடி நீ டாக்டருக்கு படிச்சதனாலே தானே உனக்கு இவ்வளவு பெருமையும்” என்று……..என்னுடன் நூற்றி எண்பது பேர் டாக்டருக்கு படித்தார்கள் அதே சென்னை மருத்துவ கல்லூரியில். ஆனால் நான் ஒருத்தி மட்டும் தான் தமிழும் படித்தேன். அதுவும் ஜன்னல்வழியே குதித்தோடிப்போய்! That has made all the difference!
ஆனந்த விகடனில் அச்சில் வெளியானதைப் படிக்க இங்கே செல்லுங்கள்:
http://linguamadarasi.blogspot.com/2010/02/blog-post.html
கடந்த வாரங்களின் நட்சத்திரங்கள்
இந்த வார நட்சத்திர இடுகைகள்
நிர்வாணப்பார்வை 3: எத்னோ செண்ட்ரிஸம்….
4 மறுமொழிகள்
நிர்வாணப்பார்வை 2: யாதும் ஊரே!
17 மறுமொழிகள்
|
Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com. If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email
Managed by Tamil Media International L.L.C..
|



